அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

கறுப்புநட்சத்திரம் காந்திமதியம்மா




                    ஒருவாரகாலமாகவே அவங்களுக்கு ஒரு போன் ‌‌பண்ணனும் என்று நினைத்திருந்தேன்,  என்  மனைவியும் திடீரென்று ஒருநாள் எப்படிங்க இருக்காங்க அம்மா ரொம்பஇளைச்சிப்போயிட்டாங்க ,( ‌டிவியில் பார்த்துவிட்டு) வீட்டுக்கு கூப்பிட்டாங்களே ஒருநாள் போய்வ‌‌ரல‌ாங்க என்றாள். ஏனெனில் இரண்டொருமுறை போனில் பேசும் போது மனைவியிடம் கொடுப்பா என்று பேசியிருக்கிறார்கள்.  ஒரு நெருங்கிய உறவினர் போல உரி‌மையுடன்  பேசுவார்.

            ''யாருடிஇவ சினிமா உலகம் புரியாதவளா இருக்க  அதல்லாம் ஜஸ்ட் ஒரு பார்மலிட்டிக்காக  கூப்பிடுவாங்க ஒடனே போயிடுனுமா ? ''
            
               எனக்கும் தொழில்முறை நட்புதானே தவிர  ‌‌ரொம்பவும்  அந்நியோன்யம் கிடையாது.ஆனாலும் பாசத்துடன் பேசுவார்.வாழ்வின் இறுதி நாட்களில் ரொம்பவே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயம்பட்டிருந்தது அவர்கள் பேச்சினுாடே தெரிந்தது. ‌கடைசியாக எங்கள் சீரியலில் நடித்தவர்,  உடல்நிலைமிகவும்மோசமானதால் திடீரென நிறுத்தப்பட்டது அவர்கள் கேரக்டர். சில வாரங்கள் கடந்தது. எனக்கும் மனதைஅரித்துக்கொண்டிருந்தது  ஒரு போன் பண்ணியாவது பேசனும் என்று.
             ஒரு வழக்கமான சினிமாக்காரன் போல் நாமும் இருக்கக்ககூடாது என்றே நினைத்திருந்தேன், ஏ‌‌‌னெனில் என் திருமணம் முடிந்து சென்னை  வந்ததும் வீட்டுக்கு வந்து ஆசிர்வதித்தவர். ஒருமுறை வெளியூர் கோவில் சென்றுவந்தபோது ஒரு விளக்கு வாங்கிதந்தார்கள் அது இன்றும் என் வீட்டு சாமிபடம்முன் நின்று  ஒளிர்கிறது. ஒருமுறை  காட்சிக்காக பழ‌‌மொழிகள் கேட்டார்கள் என்பதற்காக  ஆயிரம் பழ‌மொழிகள் என்ற புத்தகம் வாங்கி இரவு போனில் சொல்ல உடனே  செலக்டிவ்வாக சில பழமொழிகளை  எழுதிவைத்துக்‌கொண்டார்கள் . அதை எழுதும்போது அவர்களின் ஆர்வத்‌தை துடி‌ப்பை என் செவிகளில் உணர்ந்தேன்.  அப்போது மணி ,இ‌‌ரவு  11  உடல்நிலை   மோசமானநிலையிலும் த‌‌‌ானே   டப்பிங் பேசுவேன் என்று பிடிவாதமாய் வருபவர்,   கால்கள் வீங்கி படியேறமுடியாமல் ‌அழுது‌கொண்டே வரும்போது  ஏதோ ஒரு விதத்தில் அவர்களை ‌‌ ‌எல்லோரும் ‌  கொடுமைப்படுத்துவதாய் நினைத்தேன்.
   
                கடந்த சிலமாதங்களாகவே   வீட்டுக்கு வாப்பா ‌என்று உரிமை மற்றும் வாஞ்சையோடு கூப்பிடுவார்கள்.‌எம்புள்ளைங்களோட எடுத்த போட்டோல்லாம் மாட்டிவச்சிருக்கேன் என்று ‌‌வெள்ளந்தியாய் சொல்லுவார். எம்புள்ளங்க என்றது ரஜினி கமல் இருவரையும்தான் . ஒருமுறை ஜேகே யின்   "ஜெயகாந்தனின் சிந்தனைகள்" என்ற புத்தகம் அட்டையில் ஜேகே யின் புகைப்படத்துடன்  என் டேபிள் மீதுஇருந்தது ,அதைக்கண்டதும் எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டே சிறிது ‌நேரம் ‌‌மௌனமானார்கள். கண்களில் ‌நீர்திவளைகள் . நான் பதறிவிட்டேன் .   சில நிமிடங்களுக்குப்பிறகு ''சிங்கம்யா அவர் சிங்கம்யா" என்று மனம் ‌பெருமையாய் பூரிப்பாய் சிந்திய கண்ணீரைத்துடைத்தபடி சொன்னார்கள்,தேவையில்லாமல் ஏதோ அவர்களின் ‌பழைய நினைவுகளை கிளறிவிட்டே‌னோ என்று சங்கடமாயிருந்தது.

                      சீரியலிலிருந்து ஒதுங்கி ஒருசில மாதங்களுக்குப்பிறகு  திடீரென அந்த துயரச் செய்தி வந்தடைந்தது என்செவிகளுக்கு அம்மா இறந்துட்டாங்களாம் என்று .
        அன்று இருந்த வேலைகளை முடித்து சற்று சீக்கிரமாகவே நானும் நண்பரும் வீட்டைநெருங்கியபோது  ‌தண்ணீர் ‌தெளிக்கப்பட்டு ஈரமான தெரு வெறிச்சோடியிருந்தது .அருகில் விசாரித்தபோது எடுத்துட்டுப்போயிட்டாங்க என்றனர்,   ஒருமுறை உசிரோடு இருக்கும்போது வந்திருக்கலாம் என்ற வருத்தம் மனதைக்கவ்வியது. அம்மா முகத்த பார்க்கக்கூடமுடியல  என்றபோது என் நெஞ்சுக்குள் ஏதோ ‌ பாரமாக அழுத்தியது.   அவர்‌களோடு ‌பணிபுரிந்ததே பாக்கியம். அவர்களின் மறைவு திரையுலகில்  ஈடு‌செய்யமுடியாத இழப்பு என்பது வலுவற்ற வார்த்தைகள்.
 
          காமெடி தொடரில் நடித்த கம்பீரமான கலகலப்பான கில்லாடி பாட்டியின் முகம் ஒரு சித்திரமாக நெஞ்சில் பத்திரமாய் இருக்கிறது, அந்தமுகமே கண்முன்னே நிழலாடியது,அந்த ‌கேரக்டரின் வாயிலாக அவர்களை நினைத்துக்கொள்வதே மனதிற்கு சந்தோசத்தைத்தருகிறது ,அந்த பிம்பத்தை ‌‌‌‌அழித்துக்கொள்வதுபோல் அவர்கள்முகத்தைப்பார் க்காமல் போனதும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று தோன்றியது.


கருத்துகள் இல்லை: